தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 60 நாட்களாகியும் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிச.9- அன்று நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். அவர் கணவர் ஹேம்நாத்தை அறைக்கு வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு பட்டுப் புடவையால் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவர் ஹேம்நாத் அடித்துக்கொன்றதாக பெற்றோர் குற்றம் சாட்டினர், பின்னர் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தே காரணம் என்று புகார் அளிக்கப்பட்டு அந்தப்புகாரின்பேரில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
நசரத்பேட்டை காவல் நிலையத்தினரால் டிசம்பர் 12-ல் ஹேம்நாத் கைதானார். பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஹேம்நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில், சித்ரா தற்கொலை தான் செய்துக்கொண்டார் என வழக்கு விசாரணையின்போது தெரிவித்தனர். எனினும் சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க போலீஸார் ஆட்சேபம் தெரிவித்ததால் கடந்த முறை ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. சித்ராவின் நகங்கள் ஆய்விற்கு அனுப்பப்பட்டதில் ஹேம்நாத்திற்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹேம்நாத் கைதாகி 60 நாட்களை கடந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சட்டப்பூர்வ நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.