புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தின் எம்எல்ஏவான மல்லாடி கிருஷ்ணா ராவ் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து வந்தார். இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 5 முறை ஏனாமில் எம்எல்ஏவாக தேர்வாகி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இச்சூழலில், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அலுவலகத் துக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து?
புதுவை சட்டப்பேரவையில் 3 நியமன எம்எல்ஏக்களுடன் (பாஜக) மொத்தம் 33 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு நீக்கப்பட்டார். தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் சபையில் 30 எம்எல்ஏக்களே இருந்தனர். தற்போது, மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா ஏற்கப்பட்டால், எண்ணிக்கை 29 ஆக குறையும். சபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெரும்பான்மை கிடைக்கும்.
ஆளுங்கட்சியான காங்கிரஸில் 11 பேரும், கூட்டணிக் கட்சி திமுகவில் 3 பேரும், சுயேச்்சை எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் என காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மொத்தம் 15 பேரின் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும், பாஜகவில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில், ஆளும்காங்கிரஸ் அரசுக்கு ஒரே ஒருஎம்எல்ஏ மட்டுமே எதிர்க் கட்சியைகூட கூடுதலாக உள் ளது. இதனால்புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்குஆபத்து ஏற்பட்டிருக்கிறது.