சென்னையில் உருவாகும் குப்பைகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் 38 வகையான திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் அனைத்துநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், தூய்மைக்கான கணக்கெடுப்பு நடத்தி, பல்வேறு துறைகளில் வளாகத்தை தூய்மையாக பராமரித்த அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு தூய்மைக்கான விருது வழங்கி கவுரவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைக்கான கணக்கெடுப்பு நடத்தி, தேர்வுசெய்யப்பட்டோருக்கு தூய்மைக்கான விருதுகள் வழங்கும் விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று, கரோனா தொற்று காலத்தில் மாநகராட்சியில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட சிறந்த 30 தூய்மைப்பணியாளர்களுக்கு தூய்மைக்கான விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
மேலும் சிறந்த தொழிற்சாலைகள், நட்சத்திர உணவகங்கள், இதர உணவகங்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: சென்னையில் உருவாகும் குப்பைகளை தனித்தனியாக வகைப் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்துவது போன்ற 38 வகையான திட்டங்களை மாநகராட்சி உருவாக்கி வருகிறது.
இதில் 10 திட்டங்களை விரைவில் முதல்வர் பழனிசாமி திறக்க உள்ளார். இதன்மூலம் சென்னையில் தினமும் உருவாகும் 5 ஆயிரம் டன் கழிவில், 1,000 டன் வரை அழிக்க முடியும்.
ஈரக் குப்பை, உலர் குப்பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து கொடுக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதை முறையாக செய்தால், சென்னையை தூய்மையாகபராமரிக்க முடியும். சென்னைமாநகராட்சியில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களை நீர்நிலைகளாக மாற்றுவதே மாநகராட்சியின் நோக்கம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.திவ்யதர்ஷினி, துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.