சென்னையை அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி செம்பாக்கம் நகராட்சி அலுவலகம் முன்பாக திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திமுக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன். எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

செம்பாக்கம் நகராட்சியில் ஒப்பந்த நடைமுறையில் முறைகேடு நடப்பதாக கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே செம்பாக்கம் நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் நகராட்சியில் ஒப்பந்தமுறைகேடு, லஞ்சம், ஊழல் நடப்பதாக கூறி அதைக் கண்டித்தும், முடங்கிப் போன பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் செம்பாக்கம் திமுக சார்பில், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுகசெயலாளர் தா.மோ.அன்பரசன்எம்எல்ஏ, தாம்பரம் எம்எஸ்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: செம்பாக்கம் நகராட்சியில் மக்கள் பணம் பல்வேறு வழிகளில் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பணிகளை செய்கின்றனர்.

குடிநீர், குப்பை, சாலை அமைப்பு, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட எந்தப் பணியிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. வீடு கட்ட அனுமதி வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வீடு கட்ட அனுமதி கிடைக்கிறது.

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் போலி பில் போட்டு கொள்ளையடிக்கும் வேலையை அதிகாரிகள் செய்கின்றனர். அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. அதிகாரிகள் தங்கள் தவறை திருத்தி கொள்ள வேண்டும். மக்களுக்கு பணி செய்ய முன்வர வேண்டும். செம்பாக்கம் நகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படும். காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக நடத்து கொள்கின்றனர். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT