தமிழகம்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்: பிப்.21-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்?

செய்திப்பிரிவு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை பிப்.21-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதாக தெரிகிறது.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக, கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் கட்டப்பட்ட கதவணையில் இருந்து கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.700 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக, கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கால்வாய் அமைய உள்ள பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 11 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வெட்டுவதற்கு நீர் வள ஆதாரத் துறை மூலம் ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, குன்னத்தூரில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் தொடக்க இடமான விராலிமலை அருகே குன்னத்தூரில் கால்வாய் வெட்டும் பணியை தமிழக முதல்வர் பழனிசாமி பிப்.21-ம் தேதி நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, குன்னத்தூரில் தொடக்க விழா நடத்துவதற்கான இடத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்பு பொறியாளர் வேட்டைசெல்வம் உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT