நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற பொதுமக்களிடம் ஆதரவுகேட்டு தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து தற்போது பிரதான கட்சிகளின் தொண்டர்களும் களம் இறங்கத் தொடங்கிவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. திமுக தொண்டரான இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் கடந்த ஜனவரி 23 ம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். கடந்த பிப்ரவரி 10 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி கூறுகிறார். துண்டுபிரசுரங்களையும் வழங்கி திமுகவிற்கு ஆதரவு திரட்டுகிறார்.
சஞ்சீவி கூறுகையில், இதுவரை 14 மாவட்டங்கள் வழியாக மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தில் பயணித்துள்ளேன். திமுகவின் சாதனைகளை மக்களிடம் விளக்கிக்கூறி வருகிறேன்.
மக்களிடம் திமுகவிற்கு அதிக வரவேற்பு உள்ளதை காண முடிகிறது. தலைவர்கள் முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். எனவே நானும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே எனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டேன். தேர்தல் முடியும் வரை சைக்கிள் பயணம் தான். மேலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன், என்றார்.