தமிழகம்

ஓசூரில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலை: ஆண்டுக்கு 1.10 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கலாம்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூரில் 1.23 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.635 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் நவீன மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையை ஏத்தர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் நிறுவியுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்த தருண் மேத்தா மற்றும் எஸ்.ஜெயின் ஆகிய இரண்டு பேர் இணைந்து நவீனத் தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை வடிவமைத்தனர். பின்னர் மின்சார வாகனம் தயாரிக்கும் ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனத்தை பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் தொடங்கி நடத்தி வந்தனர். பின்பு பெங்களூருவில் அலுவலகத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மின்சார வாகன உற்பத்திக் கூடத்தை ஓசூர் நகருக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

ஓசூர் - தளி சாலை மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள மாடல் பள்ளி பின்புறம் சுமார் 1.23 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில், நவீன வடிவமைப்பில் மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஏத்தர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார இருசக்கர வாகனங்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் தருண்மேத்தா தலைமை தாங்கி 4 வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து தருண் மேத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மேக் இன் இந்தியா விஷனுக்கு இந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஏனெனில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத் தயாரிப்புகளில் 90 சதவீதம் உள்ளுரில் சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்கான பெரும்பாலான சப்ளையர் தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதனால் ஏத்தர் எனர்ஜி தொழிற்சாலைக்கு ஏற்ற இடமாக ஓசூர் திகழ்கிறது. இந்த புதிய தொழிற்சாலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல் உற்பத்தி தொடங்கப்பட்டு, சென்னை, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு மின்சார வாகன விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் மற்ற நகரங்களுக்கும் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலை ஆண்டுக்கு சராசரியாக 1.10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனும், ஆண்டுதோறும் 1.20 லட்சம் பேட்டரி பேக்குகள் உற்பத்தி செய்யும் திறனும் கொண்டது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பேட்டரிக்கு 13 காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏத்தர் 450 எக்ஸ் 2.9 கிலோவாட்ஸ் பேட்டரிகளில் 21700 வகை லித்தியம் அயன் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது பேட்டரிக்கு அதிக ஆற்றல், வேகமான சார்ஜிங் மற்றும் அதிக செயல்திறனை வழங்குகிறது. மேலும் வாகனப் பரிசோதனை மற்றும் இயக்கத்தின்போது காற்று மாசுபாடு ஏற்படுவதில்லை. தொழிற்சாலையில் இருந்து பூஜ்ஜியக் கழிவுகள் உருவாகின்றன. அனைத்து மின் கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.

ஓசூரில் இந்த நவீன மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு மையத்தை திறப்பது உண்மையிலேயே ஒரு மைல்கல் ஆகும். நாட்டில் மின்சார இருசக்கர வாகன நுகர்வோர் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்சார இருசக்கர வாகனத் தேவையை ஓசூர் ஏத்தர் எனர்ஜி தொழிற்சாலை பூர்த்தி செய்யும்.

இந்தத் தொழிற்சாலை மூலமாக வேலைவாய்ப்புகள் உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மின்வாகனத் துறையில் தேவையான பயிற்சி அளிக்கப்படும். இந்தத் தொழிற்சாலையை பிப்ரவரி 16 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைக்க உள்ளார்''.

இவ்வாறு தருண் மேத்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT