சென்னையில் சனிக்கிழமை 107.24 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்று வீசியதால் மக்கள் தவியாய்த் தவித்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அப்போது, பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக, வெயிலின் தாக்கமும் கொஞ்சம் குறைந்திருந்தது. கடந்த 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்தது. இதனால், வெயில் குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியில் தலைகாட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
சென்னையில் சனிக்கிழமை 107.24 டிகிரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். பணிக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். பஸ்களில் கம்பிகள் நெருப்பாக சுட்டெரித்தன. வியர்த்துக் கொட்டியதால் பயணிகள் பாடு திண்டாட்டமானது.
சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 104 டிகிரி வெயில் பதிவானது. நாகப்பட்டினத்தில் 103.82, திருச்சியில் 102.74, கடலூரில் 101.66, காரைக்காலில் 101.48, வேலூரில் 99.32 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
சனிக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 5 செ.மீ., வாணியம்பாடி மற்றும் கலவையில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.