நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் `பாஸ்டேக்' கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் `பாஸ்டேக்' நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை நாடு முழுவதும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 'பாஸ்டேக்' கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 15-ம்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் அனைத்து பாதைகளிலும் பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் பாஸ்டேக் நடைமுறை கட்டாயமாகிறது. பாஸ்டேக் இல்லாத வாகன உரிமையாளர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் `பாஸ்டேக்' நடைமுறை கட்டாயமாகிறது.
கால நீட்டிப்பு கிடையாது
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நேற்று கூறும்போது, ``பாஸ்டேக் நடைமுறைக்கான கால அவகாசம் இனிஅவகாசம் நீட்டிக்கப்படாது. தற்போது 90 சதவீத வாகனங்க ளில் `பாஸ்டேக்' அட்டை ஒட்டப்பட்டுள்ளது. அனைத்து வாகனஓட்டிகளும் உடனடியாக `பாஸ்டேக்' அட்டை வாங்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாடு முழுவதும் 40,000-க்கும் மேற்பட்ட இடங்களில் `பாஸ்டேக்' அட்டைகள் விற்கப்படுகின்றன. மேலும் சுங்கச்சாவடிகள், வங்கிகள், இணையதளம் வாயிலாகவும் பாஸ்டேக் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இந்த அட்டைகளை வாங்கிவாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டி ருக்கும் சென்சார் மூலம் வாகனத்துக்குரிய கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும். இதுபற்றிய தகவல் வாகனஓட்டியின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும்.
சுங்கச்சாவடி பாதையில் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்தத் தேவையில்லை. அவர்கள் கடந்து செல்லும்போது பாஸ்டேக் அட்டை மூலமாக கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை ஏதாவது ஓர் வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அந்த வாகனம் மட்டும் ஓரமாக நிறுத்தப்பட வேண்டும். சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆய்வு செய்து கையடக்க சென்சார் மூலம் கட்டணம் வசூல் செய்வார்கள்.
இந்த நடைமுறையால் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் கணிசமாகக் குறையும். எரிபொருள் மிச்சமாகும். வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.