டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்திபட்டாச்சார்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்துக்கும் அவர் நேரில் வருகை தந்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு, டிக்ரியில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் புதிய சட்டங்களை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுடன் மத்திய அரசுபல முறை நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த மாதம் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். 84 வயதான அவர் டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் உள்ள காஜிபூருக்கு நேற்று நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் தற்போது தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளார்.
தாரா காந்தியுடன் காந்தி ஸ்மாரக் நிதி தலைவர் ராமச்சந்திரா ராகி, அகில இந்திய சர்வ சேவா சங்க நிர்வாகி அசோக் சரண், காந்தி ஸ்மாரக் நிதி இயக்குநர் சஞ்சய் சிங்கா, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை ஆகியோரும் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் தாரா காந்தி கூறியதாவது:
அரசியல் காரணத்துக்காக நாங்கள் இங்கு வரவில்லை. நம்வாழ்நாள் முழுவதும் நமக்குஉணவளிக்கும் விவசாயிகளுக் காக வந்திருக்கிறோம்.
என்ன நடந்தாலும் விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயி களின் கடின உழைப்பு பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. விவசாயிகளின் நலனே நாட்டின் நலம்.
பிரச்சினையை தீர்க்க வேண்டும்
விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க வேண்டும். என்ன நடந்தாலும் அது விவசாயி களின் நலனுக்காக நடைபெற வேண்டும். மத்திய அரசு எடுக்கும் முடிவால் விவசாயிகள் பயன் அடைய வேண்டும்.
இவ்வாறு தாரா காந்தி பேசினார்.
இத்தகவலை பாரதீய கிசான் யூனியன் (பிகேயு) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.