ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் கிராமத்தில் சென்னைஆவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உணவகம் வைத்துள்ளார். இந்த உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (41), பாக்கியராஜ் (40) மற்றும் அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளனர்.
மூவரில் ஒருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற இருவரும் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது மூவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடு்ம்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.