தமிழகம்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும்: பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து

செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர்குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது: இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக,கம்யூனிஸ்ட்கள் செயல்படு கின்றன. பிரதமரையும், இந்துகடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார்அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தது திமுக. எனவே, திமுக, திக-வின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும்.

வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்த ஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம்போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேச பக்தர்கள் வெல்ல வேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, கேரள இந்து ஐக்கிய வேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் சார்பில் திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

          
SCROLL FOR NEXT