தமிழகம்

ஏழை மக்களின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது; பணக்காரர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு அதிகரிப்பு: மாநிலங்களவையில் டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

செய்திப்பிரிவு

ஏழை மக்களின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வரும் நிலையில், பணக்காரர்களுக்கான ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிப்பதில் என்ன பயன் விளையும்? திட்டங்கள், வசதியில்லாமல் துயரத்திலிருக்கும் மக்களை நோக்கிச் செயல்படுத்தப்படாமல், ஒருசில வசதியானவர்களுக்காகவே மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன என்று மாநிலங்களவையில் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

பட்ஜெட் உரை மீது மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் நேற்று பேசியதாவது:

''நாட்டிற்கு நன்மையைத் தரும் நிதி நிலை அறிக்கையை அளிக்க, அமைச்சர் முயற்சி செய்துள்ளார். ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுக்குள்ளும், அமைச்சகங்களுக்குள்ளும், பல வேறுபாடுகள் தெரிவதால், அவர் தனது முயற்சியில் வெற்றி அடைவாரா? என்று எனக்குத் தெரியவில்லை.

நேற்று, துறைமுகங்களைப் பற்றிப் பேசிய ஒரு அமைச்சர், பணியாளர்களுக்கு மத்திய அரசால் ஓய்வூதியம் வழங்க இயலாது என்று கூறுகிறார். எனவே, அரசு, பல தடைகளைக் கடந்தாக வேண்டும். இந்தத் தடைகளையெல்லாம் மீறி எவ்வாறு, நிதி நிலை அறிக்கை மக்களுக்கு உதவி செய்யப் போகின்றது.

ஆனால், இக்கொள்ளை நோய்த் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இந்த மத்திய அரசு அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக தினக்கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் அனைவருமே, இவர்களுக்கு உணவளித்திருக்கக் கூடும். உணவுப் பொருட்களை வழங்கியிருக்கக்கூடும்.

ஆனால், உணவு அளிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் அளிக்கப்பட வேண்டாமா? ஆனால், இந்த மத்திய அரசு செய்தது என்ன? கடந்த 18 மாதங்களாகத் துயரத்தில் ஆழ்ந்துள்ள, 60 விழுக்காடு தொழிலாளர்களுக்கும், தினக்கூலித் தொழிலாளர்களுக்கும், இந்த நிதி நிலை அறிக்கையில் எந்தத் திட்டமும் இல்லை என்ற காரணத்தால், அவர்கள் மீண்டும் துயரத்திலேயே உழல்வார்களே. எனவே, இந்த நிதி நிலை அறிக்கை, இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டாமா?

எனது சக உறுப்பினர், டாக்டர் தம்பிதுரை, குறைந்த அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம் பற்றிப் பேசினார். ஆனால், அமெரிக்க அரசினைப் போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசாங்கம் குறைவாகவும், பணக்கார அதிபர்களின் ஆளுமை அதிகமாகவும் இருப்பதை, அவர் அறியாமலே ஒப்புக்கொண்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம் என்பது அமெரிக்காவின் வழிமுறை. பருந்துகள் மிக உயரத்தில் பறக்கலாம், ஆனால், மயில்கள் உயரப் பறக்க முடியாது. தரையில் அழகாக நடனமிடத்தான் இயலும். நாம் மயில்கள், அவர்கள் பருந்துகள்.

இந்திய நாட்டு மக்களுக்கு, கல்வியும், சுகாதாரமும் உடனடித் தேவை. இந்தியாவின் மக்கள்தொகையைப் போல, மூன்றில் ஒரு பங்குடைய அமெரிக்காவில், இந்தியாவைப் போல, மூன்று மடங்கு நிலவளம் உள்ளது. இந்த நிலையில், நாம் அமெரிக்காவோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்திய மக்களின் தேவைகளை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டாமா?

அதிக நிர்வாகமும் குறைந்த அரசாங்கமும் யாருக்காக? என்பதுதான் கேள்வி. பெட்ரோலிய கம்பெனிகளை நடத்துவது, அரசின் வேலையல்ல என்கிறார் ஒரு அமைச்சர். காப்பீட்டுத் துறை, மத்திய அரசின் வேலையல்ல என்கிறார் மற்றொரு அமைச்சர். இந்தக் கடமைகளை முந்தைய அரசுகள் செய்யாமல் இருந்திருந்தால், இந்த நாட்டின் நிலைமை தற்போது என்னவாகியிருக்கும்? அரசுகள் மக்களுக்காகத்தான் என்பதை மறுக்க முடியுமா?

கடந்த 50-60 ஆண்டுகளாக, காங்கிரஸ் அரசினால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை விற்றுத் தின்றுவிட இந்த அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே, இந்த நிதி நிலை அறிக்கையினால், எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனென்றால், இந்த அரசு அவையில் சொல்வதற்கும், நாட்டில் செயலாற்றுவதிலும், பெருத்த வேறுபாடுகள் தெரிகின்றன.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை பிரதமர் அறித்துள்ளார். எலக்ட்ரானிக் கம்பெனிகள் வெளிநாட்டிலிருந்துதான் வரவேண்டும். அவற்றுக்கு சுங்கத்தீர்வை விதித்தால், பொருட்களின் விலை உயரும். பொருட்களின் விலை உயர்ந்தால், இந்த கம்பெனிகள் மீண்டும் வெளிநாடுகளுக்கே சென்று விடும். எனவே, எவ்வாறு இந்தியாவில் தயாரிக்க முடியும்?

இரண்டாவதாக, 2022ஆம் ஆண்டுக்குள், 120 கிகா வாட் அளவிற்கு, பசுமை சக்தியை உற்பத்தி செய்யப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால், சூரிய சக்தி உபகரணங்களுக்கு, சுங்கத் தீர்வை மற்றும் இதர வரிகளை அதிகரித்துள்ள நிலையில், எவ்வாறு 120 கிகா வாட் இலக்கை அடைய முடியும்?

எனவே, நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை, மற்ற அமைச்சர்களாலும், மற்ற துறைகளாலுமே ஒப்புக்கொள்ளப்படுமா? என்ற நிலையில், மத்திய அரசு, வேறுபாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறது. காற்று மாசுவைக் கட்டுப்படுத்த, குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரும் இந்த நேரத்தில், மருத்துவக் கழிவுகளைக் கையாள எந்த விதிகளும், மருத்துவமனைகளால் பின்பற்றப்படவில்லை. மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாததால், நோய்கள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.

மத்திய அரசு நிறுவனமான, தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாக அறிக்கை தந்துள்ளது. ஆனால், இந்த அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூபாய் 50,000 கோடி குறைவாக ஒதுக்கியுள்ளது. எனவே, மக்களின் வாங்கும் சக்தி மேலும் குறைந்துவிடும். அதனால், ஏற்கெனவே துயரத்திலுள்ள தொழிலாளர்களும், தினக்கூலிகளும் மேலும், வறுமையில் தள்ளப்படுவார்கள்.

ஏழை மக்களின் வாங்கும் சக்தி, குறைந்துகொண்டே வரும் நிலையில், பணக்காரர்களுக்கான ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிப்பதில் என்ன பயன் விளையும்? மத்திய அரசின், ஒரு அமைச்சகத்திற்கும், மற்றொரு அமைச்சகத்திற்கும் இடையே, சரியான புரிதல் இல்லை. எனவே திட்டங்கள், வசதியில்லாமல் துயரத்திலிருக்கும் மக்களை நோக்கிச் செயல்படுத்தபடாமல், ஒருசில வசதியானவர்களுக்காகவே மட்டுமே செயல்படுத்தப் படுகின்றன.

வேலையில்லாதவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கப்படவேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஏழை மக்களுக்குத் தேவையான வசதிகள், செய்து தரப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுதையொட்டி 75 வயதைக் கடந்த முதியோர்களுக்கு வருமான வரிக் கணக்குகள் அளிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கான வரி, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியினரால், பிடித்தம் செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் சலுகையா? எனவே இந்த நிதி நிலை அறிக்கையில் பூசி மெழுகும் வேலையே, அதிகமாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

பல திட்டங்கள் இந்த அறிக்கையில் ஐந்தாண்டுத் திட்டமாக, உதாரணமாக பிரதம மந்திரியின் சுயசார்பு திட்டத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ரூபாய் 64,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம், மக்களுக்காக பணியாற்றுவதைப் போன்ற தோற்றத்தை மட்டுமே, உருவாக்க இயலும். ஆனால், ஏழை மக்களுக்காக, எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

மத்திய அரசின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களைத் தேர்ந்தெடுத்த ஏழை மக்களின் பிரதிநிதிகளுக்கு, மிகவும் குறைந்த அரசாங்கம், மத்திய அரசை ஆட்டி வைக்கும், வாங்கும் சக்தி கொண்ட பணக்காரர்களுக்கு, அதிக நிர்வாகத்தைத் தரும் அரசாகவும் இருப்பதால், மக்கள் பிரதிநிதிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இந்த நிதி நிலை அறிக்கை எந்தப் பயனையும் தரப்போவதில்லை”.

இவ்வாறு டிகேஸ் இளங்கோவன் பேசினார்.

SCROLL FOR NEXT