ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை வசதி இல்லாததால் நகருக்குள் தினமும் வாகன நெரிசலும், இரைச்சலும் அதிகரித்து வருகிறது. இதனால் சிறு விபத்துக்கள் ஏற்படுவதுடன், தேவையற்ற தாமதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் முக்கிய இணைப்புச் சாலையாக ஆண்டிபட்டி உள்ளது. தேனி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து மதுரைக்கு ஏராளமான விளை பொருட்கள் இவ்வழியாக கொண்டு செல்லப்படு கின்றன. இதற்கான தினமும் நூற்றுக்கான சரக்கு வாகனங்கள் ஆண்டிபட்டி வழியே சென்று வருகின்றன.
மேலும் ஆண்டிபட்டி, ராமேஸ்வரம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து விட்டது. மேலும் நகர மற்றும் வெளியூர் வாகனங்கள் அனைத்தும் ஒரே சாலையையே பயன்படுத்தி வருவதால் நெரிசலும், சிரமமும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஆண்டிபட்டி நகருக்குள் வைகை அணை, ராஜதானி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட இணைப்புச்சாலைகள் இணை கின்றன.
இச்சாலைகள் வழியே 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பினால் ஏற்கனவே சாலைகள் சுருங்கிவிட்ட நிலையில் நகருக்குள் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து டி.ராஜகோபாலான்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் துவங்கி சிலுக்குவார்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம், எஸ்எஸ்.புரம் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் புறவழிச்சாலைக்கான சர்வே பணிகள் நடைபெற்றன.
ஆனால் அதன்பின்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதியில் தற்போது கட்டடங்கள், குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. நிதிஒதுக்கீடும் இல்லாததால் நிலத்தையும் கையகப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது.
இதனால் தேனி மாவட்டத்தின் நுழைவுப் பகுதியான ஆண்டிபட்டியில் போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது. வெளியூர் வாகனங்கள் நகருக்குள் வராமல் இருந்தாலே பெரும் நெரிசல் குறையும் எனவே புறவழிச்சாலைத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து உள்ளூர் வியாபாரி ராஜ்குமார் கூறுகையில், திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கத்தினால் அந்தவழித்தடத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புறவழிச்சாலை வசதி இல்லாத ஒரே ஊராக ஆண்டிபட்டி உள்ளது.
தாலுகா தலைநகர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்ற பல்வேறு பெருமைகளுக்கு உரிய ஊர் இது. இருப்பினும் சாலை மேம்பாட்டிற்கான எந்த தொலைநோக்கு திட்டமும் செயல்படுத்தாததால் தினமும் நெரிசல், இரைச்சலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் புதிய திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில்வே பாதை குறுக்கிடுகிறது.
புறவழிச்சாலையில் இதுபோன்ற இடையூறுகள் இன்றி வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டு இருக்க வேண்டும். ரயில்களின் எணணிக்கை அதிகரித்து வாகனங்கள் அடிக்கடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் இத்திட்டம் பலனிக்காமல் போய்விடும். எனவே உசிலம்பட்டி-திருமங்கலம் பிரிவில் இருந்து ஆண்டிபட்டி வழியே புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அரசு இதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தினால் சர்வே, நிலம் கையகப்படுத்துதல், டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்றனர்.