குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்) டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. 725 மையங்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.
சென்னையில் திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி மேரி கல்லூரி உள்பட 126 இடங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர். என்கேடி பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:
குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டன. தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். அதேபோல் முதல்நிலைத் தேர்வின் முடிவுகளையும் விரைவில் வெளியிடுவோம். குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரூப்-4 தேர்வு மூலமாக எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 6 விதமான பணிகள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. புதிதாக அறிவிக்கப்படும் குரூப்-4 தேர்வு மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.