கோவில்பட்டி அருகேயுள்ள சொர்ணமலையின் மீது கதிர்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகே மலைமீது, 135 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான பணியை, அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மானாமதுரை ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவசக்தி மடாலய சுவாமிகள், இச்சிலைக்கான முழுப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
மலேசியா பத்துமலையில் உள்ள 108 அடி உயர முருகன் சிலையைச் செய்த, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் குழுவினரால், இந்த சிலையும் உருவாக உள்ளது. முருகன் சிலை மட்டும் 123 அடி உயரம், பீடம் 12 அடி என, மொத்தம் 135 அடி உயரத்தில் அமைய உள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்ட பின்னர், ஆசியாவில் மிக உயரமான முருகன் சிலை இதுவாகத்தான் இருக்கும்.
கோவில்பட்டி நகர் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. அதுபோல முருகன் சிலையும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட உள்ளது. 95 சதவீதம் கான்கிரீட், 3 சதவீதம் செங்கல், 2 சதவீதம் சிமென்ட் பூச்சு மூலம் சிலை உருவாக்கப்பட உள்ளது.
“கோவில்பட்டியில் இச்சிலை அமையப்பெற்றால், இப்பகுதி சுற்றுலா தலமாக மாறும். எனவே, சொர்ணமலை பகுதியில் உள்ள புலிக்குகையை சீரமைக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ள பூங்காவில், அலங்கார விளக்குகள் மற்றும் இருக்கைகள் அமைக்க வேண்டும்” என பக்தர்கள் தெரிவித்தனர்.