சுருங்கிய இதய வால்வை அறுவைசிகிச்சை இல்லாமல் பலூன் மூலம் விரிவடையச் செய்யும் சிகிச்சை கோவை அரசு மருத்துவமனை இதயவியல் பிரிவில் நேற்று முதல்முறையாக இரு பெண்களுக்கு மேற்கொள்ளப் பட்டது.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறியதாவது:
ருமாட்டிக் இதயநோய் என்பது இதயத்தில் உள்ள வால்வுகள், தொண்டையில் ஏற்படும் நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்படுவதாகும். ருமட்டிக் காய்ச்சலால் இதய வால்வு பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டு, மூச்சுத்திணறல், கால்வீக்கம், படபடப்பு ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இதய வால்வில் சுருக்கம் இருந்தால் மூட்டுவலி, தொண்டை எரிச்சல் இருக்கும். 2 வாரத்துக்கு மேல் அதிகமான காய்ச்சல் இருக்கும். குறிப்பாக 9 முதல் 16 வயதினருக்கு இவை சற்று அதிகமாக இருக்கும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாடு, போதிய காற்று வெளிச்சமின்றி நெருக்கடியான சூழலில் வாழ்வது போன்றவை இதய வால்வு சுருங்குவதற்கு முக்கிய காரணங்கள்.
தனியாரில் ரூ.1.50 லட்சம் செலவு
கோவை அரசு மருத்துவ மனையில் சுருங்கிய இதய வால்வை சரிசெய்ய அறுவை சிகிச்சைதான் வழி என்ற நிலை இருந்தது. இதில் ரத்தம் அதிகம் வீணாகும். மயக்க மருந்துகளும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அறுவைசிகிச்சை முடிந்து 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். எனவே, இதய வால்வு சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமல், ‘பலூன்' சிகிச்சை மூலமாக இதய வால்வு சுருக்கத்தை சரி செய்ய இயலும். இந்த சிகிச்சையை கோவையில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.1.50 லட்சம் வரை செலவாகும்.
இருவருக்கு சிகிச்சை
இந்த நிலையை மாற்றி, ஏழை மக்களுக்கும் கோவையிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, பிடிஎம்சி எனப்படும் ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ சுருக்கத்தை அறுவைசிகிச்சை இல்லாமல் விரிவடையச் செய்யும் பயிற்சி மற்றும் கருத்தரங்கு கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இந்த பயிலரங்கை சென்னையை சேர்ந்த மூத்த அரசு இதய மருத்துவர் ஜஸ்டின்பால் நடத்தினார். இதில், மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த கருத்தரங்கை மருத்துவ மனையின் இதயவியல் துறையின் தலைவர் ஜெ.நம்பிராஜன் நடத்தினார். அதைத்தொடர்ந்து, 29, 31 வயதுடைய இரு பெண்களுக்கு சுருங்கிய இதய வால்வை அறுவைசிகிச்சை இல்லாமல் பலூன் மூலம் விரிவடையச் செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘பலூன்' சிகிச்சை என்றால் என்ன?
‘ஷீத்’ எனப்படும் உறைக்குள் வைத்து மெல்லிய ஊசியானது தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாக நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. அதன்மூலம் இதய நடுதசையில் துளைபோட்டு, சிறிய பலூன் கருவியை எடுத்துச்சென்று இதயத்தின் இடப்பக்க சுருங்கிய வால்வு விரிவுபடுத்தப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பலூன் சிகிச்சை அளித்த 24 மணி நேரத்தில் நோயாளிகள் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என இதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பிராஜன் தெரிவித்தார்.