சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மதுரை மேலூரில் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரசாத். அடையாறு காந்தி நகர் 4-வது தெருவில் வசித்து வந்த இவர், நீலாங்கரையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையில் விற்பனையை கவனித்து வந்தார். அப்போது வந்த 5 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரசாத்தை காரில் கடத்திச் சென்றனர். இதுபற்றி நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. கடை மற்றும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதையடுத்து அனைத்து செக்போஸ்டுகளுக்கும் தகவலை தெரிவித்த தனிப்படை போலீஸார், மதுரைக்கு விரைந்தனர்.
இந்நிலையில், மதுரை மேலூரில் வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த பிரசாத்தை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட வள்ளியூர் ஐயப்பன் என்பவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட பிரசாத் மற்றும் கைது செய்யப்பட்ட ஐயப்பன் உட்பட 5 பேரையும் தனிப்படை போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். முதல் கட்ட விசாரணையில், ஐயப்பனிடம் ரூ.16 லட்சம் கடனை வாங்கிய பிரசாத், சென்னைக்கு வந்து தலைமறைவாகியுள்ளார். சென்னையில் இருப்பது தெரிந்ததும், ஐயப்பன் நண்பர்களுடன் வந்து பிரசாத்தை கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.