கொருக்குப்பேட்டையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் வினோத் (32). ஏசி மெக்கானிக். இவரது மனைவி கவிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது குழந்தைகள் நவீன் (3), பிரவீன் (1).
ஒரு மாதத்துக்கு முன்பு, பொன்னேரியில் உள்ள கவிதாவின் தாய் வீட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கவிதாமனமுடைந்து, தாய் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு, 2 கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு,வேலைக்கும் செல்ல முடியாமல், வினோத் மிகவும் கவலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வினோத் நேற்றுமுன்தினம் இரவு தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, மின்விசிறி மாட்டும் கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வினோத், 2 குழந்தைகளின் சடலங்களை ஆர்.கே.நகர் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்கொலை எண்ணம் சில நொடிகளில் திடீரென ஏற்படக்கூடியது. சற்று நேரம் நிதானமாக யோசித்தால், இதற்காகவா இப்படி முடிவெடுத்தோம் என்று எண்ணத் தோன்றும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இதுபோன்ற குழப்பமான நேரங்களில் இலவச சேவை எண் 104-க்கு போன் செய்து மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளை கூறினால் இலவச ஆலோசனை வழங்குவதற்கு உளவியல் நிபுணர்கள் தயாராக உள்ளனர். மன உளைச்சல் ஏற்படும் நேரங்களில் தயங்காமல் இந்த எண்ணை அழைக்கலாம்.