சென்னையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில்சேவை இன்று தொடங்கப்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க, கட்டணத்தை கணிசமாக குறைக்கவேண்டுமென வல்லுநர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து வசதியை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கொச்சி,ஐதராபாத், புனே உட்பட பல்வேறு இடங்களில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோரயில் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. அதன்படி சென்னையில் தற்போது 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - விம்கோநகருக்கு இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தற்போதுள்ள கட்டணத்தை காட்டிலும் கணிசமாக குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டணம் குறைக்க வேண்டும்
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. பயணிகளை எண்ணிக்கை அதிகரிக்க கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும். மக்கள் வந்து பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி கிடைக்க இணைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ஒரே டிக்கெட்டில் பேருந்துகள், மின்சார, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் பொதுபோக்குவரத்து வசதியை அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்றார்.
இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: பொதுமக்களுக்கு தரமான சாலை வசதியும், சிறப்பான பொதுபோக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமையாகும். ஊரடங்கு பிறகு மக்களுக்கு அன்றாடபோக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால், சிலர் வேறுவழியின்றி சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியகாரணமாக இருக்கிறது. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையிலும் மக்கள் வந்து, செல்ல வசதியாக இருக்கிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்இன்றி விரைவாக பயணம் செய்யமுடிகிறது. எனவே, மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் கட்டணத்தை 20 சதவீதம் குறைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.