தெற்குவாசல் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கவுன்சலிங் மையத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சமூகப் பணியாளர் சந்தியாராணி கவுன்சலிங் அளிக்கிறார். 
தமிழகம்

காவல்துறை உதவியோடு செயல்படும் சிறப்பு மையம்: மகளிருக்கு எதிரான பிரச்சினைகளை தீர்க்க கவுன்சலிங்

என்.சன்னாசி

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறைகளைத் தடுக்க, காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சட்ட நடவடிக்கையின்றி கவுன்சலிங் மூலம் மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம், டாடா நிறுவனம் ஆகியவை இணைந்து காவல்துறை அலுவலகம் மூலம் மகளிருக்கான சிறப்பு கவுன்சலிங் மையங்களை (எஸ்பிசிஎப் டபிள்யூ) ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இங்கு சமூக அறிவியல், உளவியலில் பட்டம் பெற்ற சந்தியாராணி, சிவரஞ்சனி ஆகியோர் கவுன்சிலர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

தெற்குவாசல் மகளிர் காவல்நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இம்மையம் செயல்படுகிறது. இங்கு காவல் ஆணையர், காவல் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய முறையில் கவுன்சலிங் அளிக்கின்றனர்.

கணவன், மனைவி பிரச்சினை, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான புகார்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீர்வு காணப்படுகிறது.

ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமைகளில் மகளிர் காவல் நிலையம் மற்றும் பள்ளி, கல்லூரி, அரசுத்துறை அலுவலகங்களுக்குச் சென்று பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து களப்பணி மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து சந்தியாராணி, சிவரஞ்சனி ஆகியோர் கூறியது:

பெண்களுக்கான சிறப்பு மையத்தில் சமூகப் பணியாளர்களாகப் பணிபுரிகிறோம். குடும்ப வன்முறை, உடல் சார்ந்த, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், வரதட்சணைக் கொடுமை, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் போன்ற பிரச்சினைகளுடன் வருவோருக்கு கவுன்சலிங் மூலம் ஆலோசனை வழங்குகிறோம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மையத்துக்கு வரலாம். இளம் பெண்கள் முதல் மூத்த குடிமக்களும் அணுகலாம்.

சட்டம் சார்ந்த ஆலோசனை, பாதுகாப்பு வழிமுறைகள், மேம்பாட்டுத்திறன் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

கடந்த 3 ஆண்டில் சுமார் 320-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. செல்போன்களால் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன என்றனர்.

காவல் ஆய்வாளர் ஹேமமாலா கூறுகையில், ‘‘ ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், சிறுமிகள் காதல் விவகாரத்தில் சிக்குவது அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் போக்ஸோ சட்ட வழக்குகளும் அதிகரித்துள்ளன.

தற்போதைய சூழலில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக கவுன்சலிங் தேவைப்படுகிறது. பெண்கள், சிறுமிகள் தற்கொலை மிரட்டலால் சில ஆண்களும் தவறிழைக்கின்றனர்,’’ என்றார்.

SCROLL FOR NEXT