வாராப்பூரில் ஊராட்சி வரவு, செலவு விவரங்களை வழங்கிய ஊராட்சித் தலைவர் மலர்விழி. 
தமிழகம்

சிவகங்கை எஸ்.புதூர் அருகே வரவு, செலவு விவரத்தை வீடு, வீடாக வழங்கிய ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

ஊராட்சி வரவு, செலவு விவரத்தை வீடு, வீடாகச் சென்று வழங்கிய ஊராட்சித் தலைவரை பலரும் பாராட்டினர்.

எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர், கட்டையம்பட்டி, குறும்பலூர், சடையம்பட்டி ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் தலைவராக மலர்விழி நாகராஜன் உள்ளார். இவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு விவரங்களை மக்களுக்கு தெரியும்படி நோட்டீஸ் அடித்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த நோட்டீஸை வீடு, வீடாகச் சென்று வழங்கியுள்ளார். இதுபற்றி அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, ஊராட்சித் தலைவர் மலர்விழியைப் பாராட்டினார். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மலர்விழி கூறியதாவது: நான் தேர்தல் சமயத்தில் லஞ்சம், ஊழல் இல்லாமல் வெளிப்படையாகச் செயல்படுவேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தேன். அதன்படி செயல்படுகிறேன். பொதுமக்களை கோயிலுக்கு வரவழைத்து வரவு, செலவு கணக்கு விவரங்களை வெளியிட்டேன். கோயி லுக்கு வராதவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினேன்.

அதில் சந்தேகம் இருந்தால் மக்கள் என்னை அணுகலாம்.

மேலும் எங்களது ஊராட்சியில் நிரந்தரமாகக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும், தனியார் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். மேலும் பனை, புங்கை, வேம்பு, நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நட்டு பராமரிக்கத் தொடங்கி உள்ளேன்.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கவும், நூலகத்தைப் பாடசாலையாக மாற்றவும் முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து லஞ்சம், ஊழலற்ற ஊராட்சி நிர்வாகத்தை செய்து காட்டுவேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT