படங்கள்; ஆர்.அசோக் 
தமிழகம்

உயிரைப் பறிக்கும் அபாயத்தில் மதுரை மாட்டுத்தாவணி சாலை: பாதாள பள்ளங்களால் தொடரும் விபத்துகள்- கவனிக்குமா நெடுஞ்சாலைத் துறை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் மேலூர் சாலையில் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டும், கற்கள் பெயர்ந்தும் உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் இந்தச் சாலையை கடப்பதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்து மிகப்பெரிய பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளது.

இங்கிருந்து 24 மணி நேரமும் பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கும், முக்கிய நகரப்பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகளும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு புறநகர் மொபசில் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்தச் சாலையில்தான் பூ மார்க்கெட், ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் ஹோட்டல்கள், தங்கும்விடுதிகள் உள்ளன.

அதனால், இந்த பேருந்து நிலையத்திற்குச் செல்லும் மேலூர் சாலை எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். இந்தச் சாலையை தினமும் பேருந்துகள், பொதுமக்கள் பயனிக்கும் கார், வேன் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் உள்பட தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

கடந்த 6 மாதங்களாக இந்தச் சாலை, ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து சாலையின் நடுவில் பாதாள பள்ளங்களும், குண்டும் குழியுமாக இருக்கிறது.இதனால் போக்குரவத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

குறிப்பாக கே.கே.நகர் மாநகராட்சி ஆர்ச் ரவுண்டானா முதல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை இந்தச் சாலை மிக மோசமாக உள்ளது. பூமார்க்கெட் எதிரே, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 3 இடங்களில் ஒரு அடி ஆழத்திற்கு சாலையின் நடுவில் பள்ளங்கள் உள்ளன.

இந்தப் பள்ளங்களை மூடுவதற்கும், சிதிலமடைந்த சாலையை சீரமைப்பதற்கும் நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சாலையில் எப்போதுமே வாகனங்கள் நெரிசலாகவே ஒன்றுக்கொண்டு பின்தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.

அப்போது சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகனங்கள் அதன் கீழே இறங்கும்போது அடுத்தடுத்து பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுக்கொண்டு மோதிக்கொள்ளும் விபத்துகள் நடக்கின்றன.

இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் நடக்கின்றன. அதுபோல், சாலையின் நடுவில் பல இடங்களில் நீண்ட தூரம் ஒரு சைக்கிள் டயர் இறங்கும் அளவிற்கு கோடுபோன்ற பள்ளம் உள்ளன.

இந்தப் பள்ளத்தில் இறங்கும் வேகமாக வரும் இருச்சக்கர வாகனங்கள், அதிலிருந்து மீள முடியாமல் தடுமாறி மற்ற வாகனங்களில் மோதும் சம்பவங்ளும் அடிக்கடி நடக்கின்றன.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட், முகக்கவசம் அணியவில்லை என்று தினமும் சாலையில் நின்று கொண்டு அபராதம் விதிக்கும் போக்குவரத்துப் போலீஸார், சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளங்களையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் நெடுஞ்சாலைத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையே என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT