சட்டப்பேரவை உள்ளிட்ட இடங்களில் போடப்பட்டுள்ள தடுப்புகளை நாளைக்குள் அகற்ற வேண்டும் என, காவல்துறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டியும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக்கோரியும் ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதியில் பல்வேறு இடங்களில் முள்வேலிகளுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், துணை ராணுவப்படையினர், ஐ.ஆர்.பி. போலீஸார், உள்ளூர் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே, போராட்டம் முடிந்து பல நாட்கள் ஆகியும் தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தைக் கூட்டி, தடுப்புகளை அகற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், சில இடங்களில் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.
ஆனாலும் முழுமையாக அகற்றப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை, அகற்றுவது சம்மந்தமாக இன்று (பிப். 13) முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து நடந்தபடி சென்ற முதல்வர் மணக்குள விநாயகர் கோயில் வீதி, லா தெ லொரிஸ் தென் வீதி, கொம்பாஞ்சி வீதி வழியாக சுற்றி பார்வையிட்டபடி மீண்டும் சட்டப்பேரவைக்கு சென்றார்.
அவருடன் சபாநாயகர் சிவகொழுந்து உள்ளிட்டோர் இருந்தனர். இடையிடையே, அரவிந்தர் ஆசிரமம் கேன்டீன் எதிரில், செயின்ட் லூயிஸ் வீதி, பிரான்சிஸ் மார்தேன் வீதி, ரோமன்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் என 6-க்கும் மேற்பட்ட இடங்களில் முழுமையாக தடுப்புகள் போடப்பட்டிருந்ததால் முதல்வர் நாராயணசாமியும் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது, உடன் வந்த ஆட்சியர் பூர்வா கார்க், காவல்துறை ஏடிஜிபி ஆனந்த மோகன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்களுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடனே அகற்ற உத்தரவிட்டார்.
பின்னர், இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்று 95 சதவீதம் குறைந்துவிட்டது. மத்திய அரசானது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற அனைத்து பகுதிகளில் விதிமுறைகளை தளர்வு செய்து சகஜமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்று அறிவித்தது. அப்படி இருந்தாலும் கூட புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர், துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு பல போராட்டங்கள் நடக்க இருக்கிறது என தெரிவித்து 144 தடை உத்தரவை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் பிறப்பித்தார்.
சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், முதல்வர் வீடு என சுற்றி 500 மீட்டர் தொலைவில் இந்த தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதனை அகற்ற வேண்டும் என்று நான் கூறினேன். சில சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், முமுமையாக அகற்றப்படவில்லை.
இதனால் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாரதி பூங்காவும் மூடப்பட்டது. நான் காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆளுநர் கிரண்பேடி தங்கியுள்ள ஆளுநர் மாளிகைக்கு எத்தனை அடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ, நீங்கள் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. ஆளுருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கிறோம்.
ஆனால், ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற போர்வையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் தடுப்புகள் போடுவதை ஏற்க முடியாது. உடனே அதனை அகற்ற வேண்டும் என்று கூறினேன்.
எனவே, துணைநிலை ஆளுநர் மாளிகை மதில் சுவரை ஒட்டிய இடங்களில் மட்டுமே தடுப்புகள் இருக்க வேண்டுமே, தவிர சட்டப்பேரவையின் வடக்கு, தெற்கு புறம் உள்ள தடுப்புகள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், தலைமை தபால் நிலையம், கடற்கரை சாலை செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் இருக்கின்ற தடுப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். நாளைக்குள் அனைத்தும் எடுக்கப்படும். இதனை காவல்துறை உடனடியாக செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.