பிரதமர் வருகையை ஒட்டி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர். போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதிக்க சமூக விரோதிகள்போல் கத்தியுடன் போலீஸாரை அனுப்பி உயரதிகாரிகள் நடத்திய சோதனையில் போலீஸார் திறம்பட பிடித்தனர், இதில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 500 கிராம் தங்கமும் சிக்கியது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை (பிப்.14) காலை சென்னை வருகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அதே வேளையில் திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் செலவழிக்கும் பிரதமர் மோடி விழா முடிந்தவுடன் கொச்சி புறப்பட்டுச் செல்கிறார். சென்னைக்கு விமானம் மூலம் காலை 10-35-க்கு வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்குச் சென்று அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியம் செல்கிறார்.
11.15 மணியிலிருந்து 12.30 வரை சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் 1-00 மணிக்கு மீண்டும் கார் மூலம் ஹெலிகாப்டர் தளத்தை அடைகிறார்.
பிரதமர் சென்னையில் செலவழிக்கும் நேரம் 3 மணி நேரம் மட்டுமே. பிரதமரின் பாதுகாப்புக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாரை சோதிக்க எண்ணிய உயர் போலீஸ் அதிகாரிகள் சில போலீஸாரை சமூக விரோதிகள் போல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விழா நடைபெறும் சாலை அருகே அனுப்பினர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை பிடித்து விட்டனர்.
கோப்புப் படம்
கத்தியுடன் சிலர் பிடிபட்டதால் போலீஸாரிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வந்தவர்களும் போலீஸாரே அவர்கள் சோதனைக்காக வந்தனர் என்பது தெரிந்ததும், தங்கள் பணியில் சரியாக இருந்ததற்காகவும் பிடிபட்டவர்கள் சமூக விரோதிகள் இல்லை என்பதையும் அறிந்து போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதேபோன்று போலீஸார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி 500 கிராம் தங்க நகைகளுடன் வந்த சௌகார்பேட்டை நகைக்கடையில் பணியாற்றும் சான்ட் என்பவர் சிக்கினார்.
அதை பறிமுதல் செய்த போலீஸார் நகைக்கு உரிய ஆவணங்களை காட்டி நகைகளை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர் அவ்வாறில்லாவிட்டால் வருமான வரித்துறை வசம் நகைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.