தமிழகம்

உதயநிதிக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம்: வாரிசு அரசியலால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பிரச்சாரத்திற்குச் செல்லும் இடமெல்லாம் போஸ்டர், பிளக்ஸ் பேனரில் ஆரம்பித்து வரவேற்பு வரை, கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவம், ஸ்டாலினைக் காட்டிலும் அளிக்கப்படும் பிரம்மாண்ட வரவேற்பும் தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் திமுக, அதிமுகவில் வாரிசு அரசியல் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் தலைதூக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

திமுகவில் வாரிசு அரசியலுக்கு பஞ்சமிருக்காது என்ற பேச்சு எப்போதுமே இருந்தாலும். தற்போது அது உச்சமாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் வாரிசுகள் அதிகளவு போட்டியிட்டனர்.

அதேபோல், இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாரிசுகள் அதிகளவு போட்டியிடத் தயாராகி கொண்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் ‘சீட்’ கிடைக்க வாய்ப்பு இல்லாதது தெரிந்து தற்போதே சோர்வடைந்து போய் உள்ளனர்.

இந்நிலையில் திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவிட்டனர்.

இது கட்சிக்கும், தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தைத் தந்தாலும் உதயநிதி செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகள் அளிக்கும் முக்கியத்துவமும், வரவேற்பும் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தேனி, திண்டுக்கல் வந்த உதயநிதிக்கு கட்சியினர், போஸ்டர், பிளக்ஸ் பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் முதல் வரவேற்பு வரை ஸ்டாலினை காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதன் உச்சமாக, திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மாலையை கிரேன் மூலம் உதயநிதிக்கு போட்டு வரவேற்பு வழங்கியுள்ளனர். ஐ.பி.செந்தில்குமாரும், உதயநிதியும் கட்சியைத் தாண்டி நெருங்கிய நண்பர்கள்.

உதயநிதி தென் மாவட்டங்களில் சினிமா படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் ஐ.பி.செந்தில்குமார் அவருடன் செல்வது வழக்கம். அந்த நெருக்கத்தை வெளிப்படுத்தவும், கட்சியில் தனக்கான இடத்தைத் தக்க வைக்கவும் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் வந்த உதயநிதிக்கு இந்த பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சியினர் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தும் திமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கூறி, அவர் செல்லும் இடங்களில் கடந்த சில வாரங்களாக அதீத முக்கியத்துவம் கொடுக்காமல் அடக்கி வாசிக்கும்படி சொல்லப்பட்டதாகவும், அதனாலேயே உதயநிதிக்கு முன்பு கொடுத்த முக்கியத்துவம் சமீப நாட்களாக இல்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், கடந்த இரு நாட்களாக தேனி, திண்டுக்கல்லில் உதயநிதிக்கு திமுகவினர் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு, முக்கியத்துவம் மீண்டும் திமுகவுக்கு வாரிசு அரசியல் என்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT