பருவமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 படுக்கைகள் கொண்ட சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலை யங்கள் 24 மணி நேரமும் செயல்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் நூற்றுக்கும் மேற்பட் டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றனர்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறும்போது, ‘‘மழை காரணமாக சளி, இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளன. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் மழை வெள்ளம் புகுந்த ஊர்களில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரி விக்கலாம்.