கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, நான் அங்கு போட்டியிடப்போகிறேன் என்று பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்தாண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கரோனா தொற்று காரணமாக மறைந்தார். அவரது மறைவுக்குப்பின், தற்போது அந்த நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது. உறுப்பினர் மறைந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுவதால், இதுவரை கன்னியாகுமரி தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர்,‘‘ சட்டப்பேரவை பொதுத்தேர்தலுடன் இணைத்து நடத்தப்படும். அதில் நான் போட்டியிடப்போகிறேன்’’ என்று குறிப்பிட்டதால், சிரிப்பலை உருவானது.