தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் கொடியேற்றி வைத்து, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு, கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ம் தேதி தேமுதிக கொடி நாளை தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தேமுதிகவின்21-வது கொடி நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தங்கள் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளையும், ஏழைகளுக்கு சேலைகளையும் பிரேமலதா வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், அங்கும் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்களைப் பார்த்து கையசைத்த விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வந்து அனைவரையும் சந்தித்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வின்போது 2 பெண் குழந்தைகளுக்கு ஜனனி, விஜயலதா என விஜயகாந்த் பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில் தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
விஜயகாந்த் விரைவில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திப்பதற்காக பிரச்சாரத்துக்கு வர இருக்கிறார். சசிகலாவை நான் சந்திக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. எனக்கே செய்தியை பார்த்துதான் தெரியும்.
கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்திய பிறகு, விஜயகாந்த் என்ன அறிவிக்கிறாரோ அதை ஏற்க தொண்டர்கள் தயாராக இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 7 மண்டலங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
விரைவாக பேச்சுவார்த்தை
தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் தனித்துப்போட்டியிட வேண்டி வந்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம். தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எந்தக் கட்சியும் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் பேசத் தொடங்கவில்லை. தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால் விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கோரிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.