வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், முதல்வரைச் சந்தித்தபோது, இன்று தமிழகம் தத்தளிப்பதைப் பார்த்து நிவாரணம்தான் வழங்கப்போகிறார்களோ என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த பெரும் மழையால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு கனத்த இதயத்துடன் திரும்ப வேண்டியிருந்தது. குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கடலூரில் கடிலம் ஆறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால்தான் பெருமளவு சேதம் என்று அறிகிறோம்.
பல இடங்களில் நிவாரணப் பணிகளை செய்ய முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெருக்களில் மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழை பெய்த முதல் நாள் முதல் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நிவாரணப் பணிகளில் பல்வேறு கட்சியினரும் ஈடுபட்டு வருவது ஆறுதலை அளிக்கிறது.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். நிவாரணப் பணிகளில் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். பேரழிவு நேரங்களில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
அதேபோல், எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மீட்புப் பணியிலும், மக்களின் பசியைப் போக்குவதிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்பது அவசியம்.
உதாரணமாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், முதல்வரைச் சந்தித்தபோது, இன்று தமிழகம் தத்தளிப்பதைப் பார்த்து நிவாரணம்தான் வழங்கப்போகிறார்களோ என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தச் சந்திப்பு அரசியலை மிஞ்சிய அந்தத் தேர்தலில் அரசியல் செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவிப்பதாக இருந்ததே தவிர வேறு ஏதுமில்லை.
தங்கள் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள், பாலுக்காக அழும் குழந்தைகளுக்கு உதவவும், தொண்டு செய்யவும் வேண்டும் என்ற வகையில், திரைப்படத் துறையினரும் நிவாரணப் பணியில் ஈடுபடுவது, மக்களின் துயர் துடைப்பதில் அவசியம்" என்று தமிழிசை கூறியுள்ளார்.