திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவ்வாண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 73 சிற்றினங்களைச் சேர்ந்த 26,868 பறவைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கணக்கெடுப்பின் ஒருங்கிணைப் பாளர் மு. மதிவாணன் கூறியிருப் பதாவது: திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கை கழகம் ஆகியவை இணைந்து, தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தின. 120 தன்னார்வலர்கள், 62 குளங்களில் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதில், 73 சிற்றினங்களைச் சேர்ந்த 26,868 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக 4,371 சின்ன சீழ்கை சிறவிகள், 4,237 மஞ்சள் கொக்குகள், 1,398 மீசை ஆலாக்கள், 1,343 நாமத்தலை வாத்துகள், 1,223 வெண்புருவ வாத்துகள், 1,019 ஊசிவால் வாத்துகள் பதிவு செய்யப்பட்டன.
நத்தைக் குத்தி நாரை, பாம்புத் தாரா, நீர்க் காகம், வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய பறவைகள் கங்கைகொண்டான் குளத்தில் கூடுகளில் காணப்பட்டன. திருநெல்வேலி நயினார் குளக்கரையில் உள்ள மருதம் மற்றும் இலுப்பை மரங்களில் நூற்றுக்கணக்கான பாம்புத்தாரா குஞ்சுகள் காணப்பட்டன.
முக்கூடல் அருகில் உள்ள செங்குளம் மற்றும் தாழையூத்து அருகிலுள்ள கல்குறிச்சிகுளத்தில் சைபீரியா நாட்டு பறவையினமான கருவால் மூக்கான் அதிகம் காணப்பட்டன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ள அழியும் இனங்கள் பட்டியலில் இப்பறவை இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி சிவந்திபட்டியில் மங்கோலியா நாட்டைச்சேர்ந்த வரித்தலை வாத்துகள் அதிகம் காணப்பட்டன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பறவைகள் எண் ணிக்கை குறைவாக இருந்தது.
திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதிகளில் உள்ள குளங்களில் மங்கோலியா நாட்டைச்சேர்ந்த வரித்தலை வாத்துகள் அதிகம் காணப்பட்டன.