கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அடிப்படையில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். வைரஸ் தொற்று வேகமாகப் பரவ தனிமனித விலகல் ஒன்றே தீர்வு என்பதால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலானது.
கரோனா தொற்று முற்றிலும் நீங்கிவிடவில்லை என்றால் தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டுள்ளது.
கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் முயற்சி எழுந்து பல நாடுகளில் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று.
தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிடக் கோரி சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “தனி மனித விலகல், முக கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றுவதில் சவால்களை சந்திப்பதால் மாற்றுத் திறனாளிகளில் அதிகமானோர், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.
ஐம்பது வயதுக்கு குறைவான, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க தவறிவிட்டது.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தடுப்பூசி போட மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது இல்லை, இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”. என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில சுகாதார துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.