விரைவில் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
ரசிகர் நற்பணி இயக்கத்திற்காக, பிப். 12, 2000-ம் ஆண்டு விஜயகாந்த் மூவர்ணக் கொடியை அறிமுகப்படுத்தினார். பின்னாளில் தேமுதிக தொடங்கிய பின்னர், அதே மூவர்ண கொடி கட்சி கொடியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளை கொடி நாளாக தேமுதிக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இன்று (பிப். 12) தேமுதிகவின் 21-ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு, தேமுதிக நிர்வாகிகள், பழைய கொடிக்கம்பங்களை புதுப்பிக்கவும், புதிய கொடிக்கம்பங்களை நடவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கொடி நாளை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் பரப்புரை வாகனத்தில் நின்றபடியே கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினர்.
பின்னர், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கினர். அப்போது, தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைத்தார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
மேலும், இரு பெண் குழந்தைகளுக்கு விஜயகாந்த் பெயர் சூட்டினார். ஒரு பெண் குழந்தைக்கு ஜனனி எனவும், மற்றொரு பெண் குழந்தைக்கு விஜயகாந்த் - பிரேமலதா இரு பெயர்களையும் சேர்த்து விஜயலதா என பெயர் சூட்டினார். பின்னர், கொடி நாள் வாழ்த்துகளையும் அவர் தொண்டர்களுக்குக் கூறினார்.
பின்னர் பேசிய பிரேமலதா, "தேமுதிக தலைவர் விரைவில் தமிழகம் முழுவதும் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க பிரச்சாரத்திற்கு வரவிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.