நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த், சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், குன்னூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை தமிழக பாஜகதலைவர் எல்.முருகன் வழங்கினார்.
குன்னூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், குஷ்பு, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாஜகவில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய சி.டி.ரவி, ‘‘உலகப்புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த், திமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் அதிக அளவில் பாஜகவில் இணைந்து வருவதால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’’ என்றார்.
சிவாஜியின் கொள்கை
பின்னர், செய்தியாளர்களிடம் ராம்குமார் கூறியபோது, ‘‘தேசியம்,தெய்வீகத்தை கொள்கையாக கொண்டவர் என் தந்தை சிவாஜிகணேசன். அந்த கொள்கையின்படி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அதனால்தான் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம். தமிழகம் முழுவதும் சிவாஜி மன்றத்தைசேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்’’ என்றார்.
முன்னதாக, தனது இல்லத்தில் இருந்து கமலாலயத்துக்கு ராம்குமார், தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக நடந்து வந்தார்.
கராத்தே தியாகராஜன்
சென்னை திருவான்மியூரில் நேற்று மாலை நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் சி.டி.ரவி, எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.