தமிழக அமைச்சரவைக் கூட்டம்முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட் மற்றும் புதிய தொழில் திட்டங்களுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தாக்கல் செயயப்படுவதால், அதில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
கடன் தள்ளுபடிக்கான நிதி
மேலும், ‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும். பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும்’ என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும்.
இதுதவிர, சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல, மேலும் புதிய தொழில் திட்டங்கள் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் வருகை
இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை (பிப்.13) காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மறுநாள் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.