அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு குறித்த காலத்துக்குள் வழங்கப்படாத பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராமமூர்த்தி, ஜெயராமன், மதியழகன், பரமசிவம், பாலு, கல்ராயன், குணசேகரன், ராஜூ, முருகன், ராஜேந்திரன், அண்ணாத்துரை உள்ளிட்டோர் தங்களுக்கு சட்டப்படி 2 மாதங்களுக்குள் வழங்கப்படாத பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதில் தொடர்ந்து மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் உடல் உழைப்பை அளித்து போக்குவரத்துக் கழகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் தொழிலாளர், இறுதியில் வழக்கு தொடர்ந்தே தனது ஓய்வூதியத்தைப் பெற வேண்டிய அவலம் உள்ளது. பல ஆண்டுகளாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படாத கொடுமையும் நடக்கிறது.
ஆனால், அதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பணப் பலன்களை குறித்த காலத்தில் வழங்கி முன்மாதிரி நிறுவனமாக திகழ வேண்டும். ஓய்வூதிய பணப் பலன்களை ஒவ்வொரு தொழிலாளரும் சட்ட ரீதியாக பெற தகுதியுடையவர்கள் என்பதை போக்குவரத்துக் கழகம் மறந்துவிடக் கூடாது.
பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமே எஞ்சிய வாழ்நாட்களை நிம்மதியாக கழிக்க கிடைக்கும் வாழ்வாதாரம். ஆனால், அந்த ஓய்வூதியத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கவில்லை எனில் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு சமம். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற 2 மாதத்துக்குள் அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் என ஓய்வூதிய விதிகளில் உள்ளது.
மனுதாரர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதியப் பணப்பலன்களுக்கு 10 சதவீத வட்டி சேர்த்து வழங்குமாறு கோரியுள்ளனர். அரசுபோக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை குறிப்பிட்ட மாத தவணையில் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை அந்த தொகையையும் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு 18 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
10 சதவீத வட்டி
எனவே, மனுதாரர்களுக்கு குறித்த காலத்துக்குள் வழங்கப்படாத ஓய்வூதிய பணப் பலன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து மார்ச் 1 முதல் 6 தவணைகளாக வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை குறிப்பிட்ட தவணை தேதிக்குள் வழங்கவில்லை எனில் அதற்காக 10 சதவீத வட்டியைத் தரவேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து வசூலித்து தொழிலாளருக்கு தரவேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.