தமிழகம்

நாங்கள் நடுரோட்டில் நிற்கவில்லை பதவி தந்து அழகுபார்க்கிறார் தினகரன்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு பதில்

செய்திப்பிரிவு

நாங்கள் நடு ரோட்டில் நிற்கவில்லை, எங்களுக்குப் பதவிகள் வழங்கி டிடிவி.தினகரன் அழகுபார்க்கிறார் என்று முதல்வர் பழனிசாமிக்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதில் அளித்தனர்.

டிடிவி. தினகரனை நம்பிச் சென்ற 8 எம்எல்ஏக்களை அவர் நடுரோட்டில் விட்டுச் சென்றதாகவும், அவரை நம்பிச் செல்பவர்களுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். அவருக்குப் பதில் அளிக்கும் வகையில், தகுதி நீக்கம்செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, முத்தையா, தங்கத்துரை ஆகியோர் மதுரையில் நேற்று இரவுகூறியதாவது:

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் டிடிவி. தினகரனை நம்பிப் போனதால் தகுதி நீக்கம்செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறு. ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தபோது அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக ஆட்சியை உருவாக்கியவர்கள் டிடிவி தினகரனும், சசிகலாவும்தான். நாங்கள்அரசை கலைக்க வேண்டும்என ஒருபோதும் செயல்படவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் எதிர்த்தோம். நாங்கள் தினகரனை நம்பிச் சென்றதால் நடு ரோட்டில் நிற்கவில்லை. எங்களை டிடிவி. தினகரன் உயர் பதவி வழங்கி அழகு பார்க்கிறார்.

பழி சுமத்துகிறார் முதல்வர்

நாங்கள்தான் முதல்வராக பழனிசாமியைத் தேர்வு செய்தோம். அவரோ எங்களை தகுதி நீக்கம் செய்ய வைத்துவிட்டார். தன்னிடம் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக டிடிவி தினகரன் மீது பழி சுமத்துகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT