சென்னை புறநகர் மின்சார ரயில்களில், கல்லூரி மாணவர்கள் பயணிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு வரும்15-ம் தேதி முதல் நீக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுஉள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில ரயில் நிலையங்களில் மாணவர்கள் ரயில் நிலைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த புகார் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 9-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இருந்த நேரக்கட்டுப்பாடு வரும் 15-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்சார ரயில்களில் மாணவர்கள் நேரக்கட்டுப்பாடின்றி பயணம் செய்ய வேண்டுமென கோரிக்கை வந்தது. இதையடுத்து, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சார ரயில்களில் பயணிக்க தற்போது இருந்து வரும் நேரக்கட்டுப்பாடு வரும் 15-ம் தேதி முதல் நீக்கப்படுகிறது.
மாணவர்கள், தங்கள் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.