சென்னை விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்த காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும்,அயல்நாட்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்தது. தற்போது அப்பெயர்கள் அகற்றப்பட்டுள்ளது கடும்கண்டனத்துக்குரியது. இதுதமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: 1989-ல் வி.பி.சிங்பிரதமராக இருந்தபோது அன்றைய முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டன. தற்போது பாஜக ஆட்சியில் இந்த இருபெரும் தலைவர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் இருந்த காமராஜர், அண்ணா பெயர்கள் அகற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே, உடனடியாக காமராஜர், அண்ணா பெயர்களைச் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.