மாமல்லபுரம் கடற்கரையில் 160 அடி நீளம், 70 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட முதல்வர் பழனிசாமியின் மணல் சிற்பத்தை தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பொதுமக்கள் பார்வைக்கு நேற்று திறந்துவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு 160 அடி நீளம் மற்றும் 70 அடி அகலத்தில் மணல் சிற்பம்அமைக்கப்பட்டுள்ளது. இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது உருவங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும், வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதைதொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், பொதுமக்கள் பார்வைக்கு நேற்று திறந்துவைத்தார்.
மணல் சிற்பத்தை திருக்கழுக்குன்றம் ஒன்றிய அதிமுக செயலாளர் ராகவன் ஏற்பாட்டின் பேரில் கூவத்தூரை அடுத்த குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிற்பி சண்முகம் தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
மணல் சிற்ப திறப்பு விழாவுக்கு பிறகு அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்யாமல் மத்திய அரசு மறைக்க பார்க்கிறது. இதற்கு அதிமுக அரசு துணைபோகிறது" என திமுக தலைவர் ஸ்டாலின்நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
உண்மையை அறியாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்துக்குரியது. கீழடியில் தமிழக அரசு பல்வேறு ஆய்வுகளை செய்து அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. நாளை 7-வதுகட்ட அகழ்வாராய்ச்சி பணிகளைமுதல்வர் பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார்.
மேலும், தமிழகத்தில் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதிபெற்றுள்ளோம். ஆதிச்சநல்லூர் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகளை நானே தொடங்கிவைக்க உள்ளேன் என்றார்.