தமிழகம்

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியின்போது 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி பிரதோஷமும், நேற்று தை அமாவாசை வழிபாடும் நடைபெற்றன. இதையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் இன்று (பிப்.12) வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல கோயில் நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் அனுமதி அளித்துள்ளனர்.

தை அமாவாசை வழிபாட்டையொட்டி நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலையேறும் முன்பு பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆண்டுதோறும் தை, ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கே ஏராளமானோர் வைகை ஆற்றங்கரையில் குவிந்தனர்.

தர்ப்பணம் செய்வதற்காக ஆற்றின் கரையில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து புஷ்பவனேசுவரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.

SCROLL FOR NEXT