வேளச்சேரியில் கடைக்கு சென்ற கணவன், மனைவி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் கருணா. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஆதித்யாஸ்ரீ(3), திவ்யஸ்ரீ(2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நேற்று மாலை இரண்டு குழந்தைகளுடன் கணவனும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் அஷ்டலட்சுமி நகர் 6-வது தெரு வுக்கு வந்தனர். சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கருணா மட்டும் அருகே இருந்த கடைக்கு சென்றார். மனைவி, குழந்தைகளை மோட்டார் சைக்கிள் அருகிலேயே விட்டுவிட்டு சென்றார். பொருட்கள் வாங்கிய பின்னர் அவற்றை தூக்கி வருவதற்காக கடையில் இருந்த கருணா மனைவி சுதாவை அழைக்க, குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து விட்டு சுதாவும் கடைக்கு சென்றார்.
கருணாவும், சுதாவும் பொருட்களை வாங்கி விட்டு கடையில் இருந்து வெளியே வரவும், அவர்களின் தலைக்கு மேலே சென்ற மின்சார கம்பி திடீரென அறுந்து இருவரின் மேலும் விழுந்தது. இதில் இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மின்சார இணைப்பை துண்டித்து இருவரின் உடல்களையும் போலீஸார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் இறந்து கிடந்ததை பார்த்து இரு குழந்தைகளும் கதறி அழுதது அருகே இருந்தவர்களை நெஞ்சுருக வைத்தது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தை கண்டித்து வேளச்சேரி 100 அடி சாலையில் சாலை மறியல் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் போராட்டம் நீடித்தது. போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக வைத்தனர்.