நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, குணடர் தடுப்புப் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை மண்ணடி அருகேயுள்ள தம்பு செட்டி வீதியைச் சேர்்ந்தவர் கல்யாணராமன்(54). பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த மாதம் 31-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதோடு, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மதப் பிரச்சினையை தூண்டும் வகையில் தரக்குறைவாக, இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் போலீஸார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கல்யாணராமன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோபி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட கல்யாணராமன் மீது சென்னை பெருநகர போலீஸாரும் நேற்று முன்தினம் அவதூறு வழக்கை பதிவு செய்தனர். அதேபோல், கல்யாணராமன் மீது மேற்கண்ட வழக்குகள் உட்பட மொத்தம் 10 வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், மோதலை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கைது செய்யப்பட்ட கல்யாணராமனை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடும்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
அதன் பேரில், கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, அடைக்க ஆட்சியர் கு.ராசாமணி இன்று (11-ம் தேதி) உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக் கடிதத்தை மேட்டுப்பாளையம் போலீஸார், சிறைத்துறை நிர்வாகத்தினரிடம் இன்று மாலை வழங்கினர். இதைத் தொடர்ந்து கல்யாணராமன் சிறையில் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டார்.