திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் பழனிசாமி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
வரும் 18-ம் தேதி திருநெல்வேலிக்கு வரும் தமிழக முதல்வர் கேடிசி நகர் மாதா மாளிகையில் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் வள்ளியூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து களக்காடு, சேரன்மகாதேவியில் பிரச்சாரம் செய்யும் அவர், செங்குளத்தில் நடைபெறும் மகளிரணி கூட்டத்திலும் பேசுகிறார். அன்று பிற்பகலில் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் செய்கிறார்.
அங்கிருந்து குற்றாலம் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர், அடுத்த நாள் 19-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார்.
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி முன்னிலை வகித்தார். நாங்குநேரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
வள்ளியூரில் ஆலோசனைக் கூட்டம்:
இதனிடையே வள்ளியூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ராதாபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம் ஒன்றியங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.