நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.17.68 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லமணி (42). அவரது கணவர் ராமலிங்கம் (47). இருவரும் இணைந்து 'கேபிஆர்எஸ் பவுல்டரி பார்ம்ஸ்' என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனத்தை 2016-ம் ஆண்டு தொடங்கினர்.
இந்த நிறுவனத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 'ஷெட் அமைத்து, 200 நாட்டு கோழிக்குஞ்சுகளை அளிப்போம். மாதம் ரூ.6,000 வீதம் 36 மாதங்களுக்கு பராமரிப்பு செலவு அளிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்கப்படும்' என கவர்ச்சிகரமாக திட்டத்தை அறிவித்தனர்.
இதனை நம்பி 9 பேர் மொத்தம் ரூ.17.68 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், குறிப்பிட்டபடி பராமரிப்பு செலவு, போனஸ் போன்றவற்றை வழங்கவில்லை.
இதையடுத்து, சங்ககிரியை அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த எஸ்.சுப்பிரமணியன் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் செல்லமணி, ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10.18 லட்சம் அபராதம் விதித்ததோடு, அதில் ரூ.10 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று (பிப். 11) உத்தரவிட்டார்.