அன்பழகன் 
தமிழகம்

சேலத்தில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வி.சீனிவாசன்

சேலத்தில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மில் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, சேலத்துக்கு திரும்பும் நிலையில், காவல் கட்டுப்பாடு அறை எண்:100-க்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், சேலம், சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக, மாநகர மற்றும் மாவட்ட போலீஸார் சேலம், நெடுஞ்சாலை நகரிலும், சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டிலும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு ஏதுமில்லை என்பது போலீஸார் சோதனையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து அலைபேசி வாயிலாக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. போலீஸார் உடனடியாக பல்லடம் விரைந்து சென்று அலைபேசிக்கு சொந்தக்காரரான சேகர் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அன்பழகன் (47) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

பல்லடத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில், உடன் வேலை பார்க்கும் சேகரின் அலைபேசியை கொண்டு, முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பூலாம்பட்டி போலீஸார் அன்பழகனை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT