கோவை விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ.2.85 கோடி மதிப்பிலான 5.74 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கடந்த 1-ம் தேதி கோவை விமானநிலையம் வந்த 5 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 5 பேரும் மலக்குடலில் 6.318 கிலோ எடைகொண்ட 'பேஸ்ட்' வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதில் ஒருவர் பதற்றமாக இருந்ததை அறிந்த அதிகாரிகள், அவரிடம் மேற்கொண்ட சோதனையில் 324 கிராம் எடைகொண்ட தங்கத்தை 28 'கேப்சூல்கள்' வாயிலாக விழுங்கி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
மலக்குடலிலும், விழுங்கப்பட்ட 'கேப்சூல்கள்' மூலமும் கடத்தி வரப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்ததில் மொத்தம் ரூ.2.85 கோடி மதிப்பிலான 5.74 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
மலக்குடல், பைகள், மின்சார சாதனங்களில் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகளால் கண்டறிய முடியாத இவ்வகை கடத்தலை, தீவிர சோதனைகள் மற்றும் விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவரை கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.