தமிழகம்

தினகரனிடம் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும்: சி.வி.சண்முகம் கருத்து

எஸ்.நீலவண்ணன்

தினகரனிடம் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது:

''விவசாயியாக வேடமிட்டவர் ஸ்டாலின். அவருக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் தெரியாது. தமிழக முதல்வர் பழனிசாமி விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். இன்றும் அவர் மாதம் ஒருமுறை கிராமத்திற்கு சென்று விவசாயத்தை கவனித்துவருகிறார்.

ஸ்டாலின் போல ஆடம்பரமாக வாழ்பவர் அல்ல. ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்ப தயாராக இல்லை. அவர் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது மக்களின் குறைகளைத் தீர்க்காதவர், தற்போது எதிர்க் கட்சியில் இருக்கும்போது செய்வேன் என்கிறார். சட்டப்பேரவையில் பேச வேண்டிய இடத்தில் பேசாமல், இதுவரை பெற்ற மனுக்களைப் பற்றிப் பேச முடியாதவர், இப்போது என்ன சாதிக்கப் போகிறார்?

சசிகலா அதிமுக கொடியைத் தனது காரில் கட்டிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். சசிகலாவிற்கு ஒரு எச்சரிக்கை. தினகரனிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சசிகலா இந்தக் கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்தார். அவர் ஒரே மாதத்தில் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தார். ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல் என்பார் தினகரன். ஓப்பன் செல்லே தினகரன்தான். அதிமுக எந்தச் சூழலிலும் சசிகலா குடும்பத்திற்கு அடிமையாக இருக்காது''.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT