தமிழகம்

மதுரை ஆவின் இயக்குநர்களாக 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை ஆவினுக்கு போட்டியின்றி 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மதுரை மம்சாபுரம் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆவினுக்கு 17 இயக்குநர்களை தேர்வு செய்வது தொடர்பாக 15.2.2020-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. நான் உட்பட பலர் வேட்புமனு தாக்கல் செய்தோம்.

தேர்தல் விதிப்படி பிப். 28-ல் வேட்புமனு பரிசீலனை நடைபெற வேண்டும். ஆனால் அதன்படி வேட்புமனு பரிசீலனை நடைபெறவில்லை.

இந்நிலையில் பழனியப்பன், தங்கராஜன், சோமசுந்தரம், தனலெட்சுமி, போதும்பொன்னு, அன்னலெட்சுமி, பாரதி, மணிமேகலை, தேன்மொழி, வளர்மதி, கவிதா, மீனாலெட்சுமி, முருகன் ஆகிய 13 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், மற்றவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

பிப். 29-ல் பழனியப்பன் உட்பட 13 பேரும் போட்டியின்றி ஆவின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டார். தேர்தல் அலுவலர் பழனியப்பன் உள்ளிட்ட 13 பேருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.

எனவே, 13 பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கால்நடைதுறை தவிர்த்து பிற துறை அதிகாரியை நியமித்து புதிதாக ஆவின் இயக்குனர்கள் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கைக்காக லதா, வைரமணி ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆவின் இயக்குநர்களாக போட்டியின்றி தேர்வான பழனியப்பன், தங்கராஜன் தவிர்த்து மற்ற 11 இயக்குனர்கள் பொறுப்பேற்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மதுரை ஆவினில் போட்டியின்றி 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. புதிதாக 11 இயக்குநர்களை தேர்வு செய்ய 3 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் வெளிப்படையாகவும், விதிப்படியும் நடைபெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT