தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாக புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (பிப்.11) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ்- திமுக கட்சிகள் தங்களது சுயநலமிக்க தவறுகளை மூடி மறைத்து, உண்மைக்குப் புறம்பாக பல்வேறு விஷயங்களைப் பேசி வருவது நாடகத்தனமாக இருக்கிறது.
நியமன எம்எல்ஏக்கள் மூலம் பெரும்பான்மை இல்லாத அரசைத் தக்க வைத்த நாடகத்தைத் தொடங்கி வைத்ததே திமுகதான். எனவே தற்போது நியமன எம்எல்ஏக்களின் நியமனத்தைப்பற்றியும், அவர்களுக்குள்ள அதிகாரத்தைப் பற்றியும் பேச திமுகவுக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.
தமிழக அதிமுக அரசால் நிறைவேற்றப்படும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைத் திமுக ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்தாமல் விட்டுவிட்டு, இன்று மக்கள் நலனிற்காக அல்லும்பகலும் அயராது சிந்தித்து, திட்டங்களை தமிழக அதிமுக அரசு நிறைவேற்றும்போது எல்லாமே என்னால்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.
தங்கள் ஆட்சியில் விஞ்ஞான ரீதியில் ஊழலும், முறைகேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் செய்த திமுகவினர் தற்போது எல்லாவற்றையும் மறைத்துவிட்டு உத்தமர் வேஷம் போடுகின்றனர். புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் அகற்றுவேன் என்றார். ஆனால் இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி பொம்மை முதல்வர். அனைத்துத் துறைகளிலும் அவர் தோல்வி அடைந்துவிட்டார். மக்கள் நலன் கருதி ஆட்சியர், டிஜிபி இருவரும் தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினைப் பின்பற்றி புதுச்சேரி திமுகவும் நியமன எம்எல்ஏக்கள் விஷயத்தில் தங்களது ஜனநாயகப் படுகொலையை மூடி மறைக்க முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சாதத்தில் மறைக்கப் பார்க்கிறது. அதேபோன்று மத்தியிலும், மாநிலத்திலும் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல், மத்திய நிதி கமிஷனிலும் புதுச்சேரியைச் சேர்க்காமல் மிகப்பெரிய துரோகத்தை புதுச்சேரி மாநிலத்துக்கு இழைத்தனர். ஆனால் தற்போது தேர்தல் வரும் இந்நேரத்தில் மாநில அந்தஸ்தைப்பற்றி காங்கிரஸ்- திமுக பேசுவது மாறுபட்ட செயலாகும். மாநில அந்தஸ்தைப்பற்றி பேசும் உரிமையோ, தகுதியோ காங்கிரஸ்- திமுகவுக்கு இல்லை.
புதுச்சேரிக்கு வரும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும். ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க முயற்சி நடப்பதாகப் பொய்யான தகவல்களைக் கூறி மக்களிடையே பிரிவினைவாதத்தை முதல்வர் நாராயணசாமி ஏற்படுத்தி வருகிறார். எனவே புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியருக்குத் தமிழ் தெரியாததால், தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம்.’’
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.